கட்டுப்பாடு என்ற பெயரில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களை ஒடுக்கக் கூடாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21.06) ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் சில கேள்விகளை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஒரு நாட்டின் வெகுஜன ஊடகங்கள் என்பது மக்களது ஜனநாயகத்தின் நான்காவது தூணாகும். ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தத்தை பேணுவதும் இந்த ஊடகங்கள் தான்.
எனவே ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். தகவல் மூலங்களைப் பாதுகாக்க ஊடகங்களுக்கு உரிமையுள்ளது. இருப்பினும், இலத்திரனியல் ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சில குறிப்பிட்ட சட்டம் இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
என்றாலும் இதற்கான அரசின் தலையீடு வரையறையுடன் கூடிய நிலையில் மேற்கொள்ளப்படுவதாக அமைய வேண்டும். கட்டுப்பாடு என்ற பெயரில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களை ஒடுக்குவது இதன் ஊடாக இடம்பெறக்கூடாது.
ஊடக ஒழுங்குமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தை வைத்து தேவையில்லாமல் ஊடகங்களை கையாள தற்போதைய அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொள்வதாகவே தோன்றுகிறது.
எனவே சுதந்திரமான ஊடகத்துறையின் அபிவிருத்திக்கான நெறிமுறைகளையும், தொழில்முறை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதலையுமே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.