உண்மை தோற்கடிக்கப்பட்டு பொய் வென்றமையினால் எமது நாடு இவ்வாறானதொரு அவலத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 99 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (23.06) கொழும்பு டீ.பீ.ஜாயா சாஹிரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான சாதனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் கூட அர்த்தமுள்ள விடயங்களுக்கன்றி பொய்கள், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுக்கே அதிக வரவேற்பு கிடைக்கப்பதாகவும், இதுபோன்ற ஒரு நிலை நாட்டில் காணப்படும் போது, தகவல் தொழில்நுட்பத்தால் நாடு வெல்லும் என்று அரசாங்கம் பொய் சொல்வதாகவும்,
தலைநகரில் உள்ள சில பாடசாலைகளில் கூட முறையான கணணி வசதி இல்லாமல் இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்புவதும் அவதூறு பரப்புவதுமே நடந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இப்போதாவது நாம் வருந்தாமல் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், அதற்காக அரசாங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே “மூச்சு”, “பிரபஞ்சம்” போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தி பாரியதொரு பணியை செய்துள்ளதாகவும் சஜித் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 31 கட்டங்களின் கீழ், ரூ.25,996,200 மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளதோடு, ரூ.344,200,000.00 மதிப்பில் 71 பேருந்துகளும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும்,மூச்சு வேலைத் திட்டத்தின் கீழ் 56 வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ் ஜனன தினத்தை கொண்டாடும் வகையில், பல்வேறு பொது மாநாடுகளை நடத்த பலர் முன்மொழிந்தனர் என்றாலும், அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் தவிர்த்து, நாட்டிற்கு பயனுள்ளதும் பெறுமதி கூட்டும் பணிகளையும் செய்ய தீர்மாணிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டத்தின் 32 ஆவது பாடசாலையாக டீ.பீ. ஜாயா ஸாஹிரா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் பெறுமதியான கணனி அச்சு இயந்திரங்களும் ஸ்மார்ட் எழுது பலகைகளும் வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.
நவீன உலகில் தொழிநுட்ப ஆற்றல் கொண்ட மாணவத் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இவ்வாறான பிரேரணையை கொண்டு வந்த கெளரவ முஜிபுர் ரஹ்மானுக்கு தனது மரியாதையை செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
நாடு வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து நாம் மீள முடியும் என்றும், ஒரு தேசம் என்ற வகையில் எம்மால் அதனைச் செய்ய முடியும் என்றும், அதற்காக நாட்டை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும், உலகில் சிறந்த வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரே இலக்கு எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டின் கல்வி முறையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்காக இன்றுள்ள முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகை போலவே கல்வித்திட்டத்தை நவீனமயப்படுத்தவும் வேண்டும் என்றும் கிளிப்பிள்ளை போன்று மனனம் செய்து ஒப்புவிக்கும் முறைக்கு பதிலாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கல்விக் கொள்கையை நோக்கி செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.