நாட்டில் விமான ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23.06) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த 6 மாதக் காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் இருந்து 70 ஓட்டுனர்கள் நீங்கியுள்ளனர். தற்போது 260பேருக்கும் குறைவான விமான ஓட்டுனர்களே இருக்கின்றனர். இந்த வருடத்தில் மேலும் 18 பேர் செல்ல இருக்கிறார்கள்.
அதனால் சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா சமயத்தில் தற்பாேது இருக்கும் விமானிகளின் ஓய்வு நேரத்தை சுருக்கி, அவர்களை சேவையில் ஈடுபடுத்துகிறார்கள். அதன் காரணமாக விமான பயணிகளின் உயிர் ஆபத்துக்கும் இடமிருக்கிறது
அதனால் விமான ஓட்டுனர்களின் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.