புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி உரை

மத்திய வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சவால்களை முறையாகவும் செயற்திறனுடம் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் நேற்று (22.06) ஆரம்பமான புதிய நிதி ஒப்பந்தத்திற்கான அமர்விற்கு இணையாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டபோது வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் அனுபவங்களை எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கை தற்போது வரையறுக்கப்பட்ட நிதி வசதிகள் தொடர்பிலான பிரவேசத்திற்குள் மட்டுப்பட்டு கிடப்பதாகவும் , நாட்டில் நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலோசிதமானதும் சுயாதீனமானதுமான பிரவேசத்துடன் சலுகை அடிப்படையிலான நிதிசார் கொள்கைகளை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த செயற்பாட்டின் போது ஏற்படக்கூடிய அதிக செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கான முறைமைகள் பற்றியும் அறிவுறுத்தினார்.

கடன் வழங்குநர் மற்றும் கடன் பெற்றவர்கள் மத்தியில் உயர் மட்டத்திலான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்றும், பூகோள அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளைத் தேடுவது அவசியம் என்ற யோசனையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

தற்போது காணப்படும் நிலையற்ற தன்மையை, போக்குவதற்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொள்ளும் பெருமளவான சவால்களை வெற்றிகொள்வதற்கு அவசியமான தனியானதொரு செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கடன் வழங்குனர்கள் தொடர்பிலான செயற்பாடுகளின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு மற்றும் இலங்கையின் ஒருங்கிணைப்பு வேலைத்திட்டம் ஆகியவை பாராட்டுக்குரியதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அபிவிருத்தி மற்றும் வணிகச் செயற்பாடுகளுக்கு மேற்படி நாடுகளும் சீனாவும் வழங்கிய ஒத்துழைப்புகளையும் நினைவுகூர்ந்தார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் போது, கடன் பெறுனர் மற்றும் குழுக்களுடான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலின் போது தலைமைத்துவம் வழங்கிய ஸ்பானிய பிரதமர் நாதியா கெல்வினோ (Nadia Calvino) அவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி

கேள்வி –

ஜனாதிபதியவர்களே, நீங்கள் தற்போது விசேடமான ஒரு நிலைப்பாட்டில் உள்ளீர்கள். நாம் தற்போது நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் பற்றி அவதானம் செலுத்துவோம். இங்கு பல்வேறு சவால்கள் உள்ளன. அதேபோல் அவை பொதுவான நிலைமைகளால் உருவானது அல்ல. சாட் குடியரசின் நிலைமையைப் போன்றே உங்களது நிலைமையை ஒப்பிடலாம். அதேபோல் பெரிஸ் சமவாயம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அல்லாத கடன் வழங்குநர்களின் குழுவொன்றை உருவாக்குதல், போன்ற கடன் வழங்குநர்களின் குழுக்களில் இணை தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா தீர்மானித்துள்ளமையும் முக்கியமான விடயங்கள் என சுட்டிக்காட்டலாம். மறுசீரமைப்புச் செயற்பாடுகள் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

சாட் குடியரசு ஜனாதிபதியின் உரையில் அதிகாரிகள் வாதத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது. அதற்கு நாங்களும் இணக்கம் தெரிவிக்கிறோம். கடுமையான விடயங்களுக்கு தீர்வுகாண எளிமைத் தன்மை மிகவும் அவசியமானது. அது பற்றிய உங்களது அனுபவம் எப்படியிருக்கிறது?

பதில் –
“நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற வகையில் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தாக அறிவித்திருக்கும் நிலையில் பொதுவான கடன் மறுசீரமைப்பு கொள்கைகள் எமக்கு பொருத்தமற்றதாகும். சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை வழங்குவதற்கான இயலுமை எம்மிடத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. அதேபோல் உள்ளக நிதி வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் பெருமளவில் முடங்கிப்போயுள்ளது. இதனால், நாம் கடன் தொடர்பான திட்டங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பின்னரே சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம்.

சரியானதொரு முறைமைக்குள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்த பின்னரே நிலைமையை சீராக்க எம்மால் முடிந்தது. அதற்கமைய முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திட்டங்கள் எவை? அவசியமற்ற திட்டங்கள் எவை? என்பன தொடர்பில் ஆராய்ந்து கைவிடப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் 90 சதவீமான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அதேபோல் மேலும் இரண்டு முக்கியமான விடயங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது.

அதில் முதல்விடயம் எமக்கு உதவிக்கு வந்த இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டொலர்கள் கிடைத்தது. அந்த நேரத்தில் எமக்கு வேறு எந்த உதவிகளும் கிடைப்பதாக தெரியவில்லை. அடுத்தாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் உதவிகளைப் பெற்றுகொள்ள முடிந்தது. அதற்கமைய எமது இலக்கு சுமூகமான நிலைமைக்கு மாறியது.

இருப்பினும் எமது நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிட்டதாக அறிவித்தன் பின்னர் அதிகாரிகளின் செயற்பாடுகளில் மந்த நிலை காணப்பட்டது. அந்த தாமதம் ஏற்பட்டிருக்காவிட்டால் மே மாதமளவில் எமக்கு நிதியத்தின் உதவிகள் கிடைத்திருந்தால் குழப்பகரமான நிலைமையை சுமூகமாக்கியிருக்கலாம்.

எவ்வாறாயினும் ஜூலை மாதத்தில் உருவான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. செப்டெம்பர் மாதமளவில் நிதியத்தின் செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை அடைந்துகொள்ள முடிந்தது. எவ்வாறாயினும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதிலிருந்து 6 மாதங்களின் பின்னரே நிதி வசதியை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதன்படி நாம் முன்னெடுத்திருந்த பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகளால் மக்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தனர். அது எவ்வித முன்னறிவிப்புக்களும் இன்றி உருவாகிய நிலைமையாகும். தலைவர் ஆசார்யா அவர்கள் கூறிய விடயங்களுடன் நான் இணங்குகிறேன். அந்த விடயங்களை நாம் விரைந்து செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

நான் முன்பு கூறியதுபோது செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை செப்டெம்பர் மாத்திலேயே அடைந்துகொள்ள முடிந்தது. நவம்பர் மாதமளவில் எம்மிடத்தில் முன்னேற்றகரமான திட்டமொன்று காணப்பட்டது. அதனை பின்னரே அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து இலங்கைக்குள் போட்டித்தன்மை மிகுந்த முன்னேற்றகரமான நிலைமை ஒன்று உருவாகியது.

அதன்படி உத்தியோபூர்வ மற்றும் தனிப்பட்ட நிதி தேவைகள் வலுவடைந்தது. இங்கு முக்கியமான விடயமொன்றைக் குறிப்பிட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளின் நிறைவில் மேலும் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கான அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான அடுத்தக்க திட்டமொன்று எம்மிடத்தில் காணப்படவில்லை. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான உரிய திட்டமிடலை தயாரிக்க வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.

எவ்வாறாயினும் மேலும் சில அனுபவங்கள் பற்றி நான் கூறுகிறேன். தரவுகளுடனும், தரவுகளுக்கு அமையவும் செயற்பட்டமையே எமது வெற்றிக்கான காரணமாகும். நாம் எங்களது வேலைத்திட்டத்தை பின்பற்றினோமே தவிர சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தினை பின்பற்றவில்லை.

பின்னர் எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கான களமொன்றை உருவாக்க முயற்சித்தோம். அவர்களின் மத்தியில் பெரிஸ் சமவாயத்தின் உறுப்பினர்களும், இந்தியா, ஹங்கேரி மற்றும் ஏனைய நாடுகள் பலவும் காணப்பட்டன. இங்கு சீனா மேற்பார்வை ரீதியில் பங்குபற்றியது. நாங்கள் எம்மிடத்தில் காணப்பட்ட அனைத்து தகவல்களையும் ஏனைய தரப்புக்களுடன் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் பரிமாற்றிக்கொண்டோம். இந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அதேநேரம் இந்தியா, ஜப்பான். சீனாவுடன் தனித்தனியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டோம். வணிக ஒருமைப்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியதாக அந்த கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையில் வலுப்பெறும் விடயங்கள் பற்றியும் நாம் அவதானிக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை நாம் தவிர்க்க முற்படாத பட்சத்தில் ஆசியாவும், ஆபிரிக்காவும் மிகப்பெரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். இதுவே தற்போது நாம் நிவர்த்திக்க வேண்டிய மிக முக்கிய சவாலாக காணப்படுகின்றது.

மறுசீரமைப்புச் செயற்பாடுகள் அவசியம். அதற்கு நான் இணங்குகிறேன். அதனை மிக விரைவில் செய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் குறைந்த வருமானம் பெறும் நாடுகள் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மைக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறான சவால்கள் இருப்பினும் வங்குரோத்து நிலையை அடையும் முன்பாக மேற்படி நிலைமைகளை சீர்ப்படுத்தினால் மிகவும் சுமூகமான நிலையை அடைந்துகொள்ள முடயும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

Social Share

Leave a Reply