விமான தாமதம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள் விளக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள், பணிச்சுமை காரணமாக தாம் நிலைக்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களால், விமான பணியாளர்களின் நடத்தை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், விமான நிர்வாகத்தினாரால் தீர்க்கப்படாத கடுமையான பிரச்சினைகளே இதற்கு காரணம் என விமானப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், தற்போது 330 விமான ஓட்டிகள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள விமான பணியாளர்கள், கடந்த ஆண்டில் 70 பேர் இராஜினாமா செய்துள்ளதாகவும், பலருடைய ராஜினாமாக்கள் நிலுவையில் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு தொழில் தரத்தை விட மிகக் குறைந்த ஊதியத்தை வழங்குவதாகவும் விமான பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை சமீபத்தில் தென் கொரியா செல்லவேண்டிய விமானம் ஒன்று தாமதமாக புறப்பட்ட விடயம் தொடர்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

Social Share

Leave a Reply