இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலன உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரின் போட்டியில் இலங்கை அணி தடுமாறி பின்னர் வெற்றி பெற்றுள்ளது.
சிம்பாவேயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடிப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து தடுமாறியது. அத்தோடு நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தின் போது வெற்றிக்காக போராடியது. இறுதி நேரம் வரை நெதர்லாந்து அணி தனக்கான வெற்றி வாய்ப்பை தக்க வைத்திருந்தது.
தனஞ்சய டி சில்வா நிதானமாக துடுப்பாடி 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தனது முதற் சதத்தை பெறும் வாய்ப்பையும் கொண்டிருந்தும் அவர் தவறவிட்டார். இறுதி நேரத்தில் மஹீஸ் தீக்க்ஷண கைகொடுக்க இலங்கை அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மஹீஸ் தீக்க்ஷண 28 ஓட்டங்களையும், டிமுத் கருணாரட்ன 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லோகன் வன் வீக், பஸ் டி லீட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 67 ஓட்டங்களையும், வெஸ்லி பர்செய் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண 3 விக்கெட்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இன்னுமொரு வெற்றியினை இலங்கை பெற்றுக் கொண்டால் உலகக்கிண்ண தொடருக்கு இலங்கை அணி தெரிவு செய்யப்படும்.
இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் ஓமான் அணி உலகக்கிண்ண தொடருக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்திருக்கிறது. சிம்பாவே அணி 6 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை தக்க வைத்துள்ளது.