இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்துக்களின் 12 ஆவது பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று (01.07) பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்த இரண்டு நாட் போட்டியில் 9 விக்கெட்களினால் யாழ் இந்தக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரி அணி 60 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்ரிஷ்ணராஜன் பரஷித் 80 ஓட்டங்களையும், M கஜன் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் R தேஸ்கர் 4 விக்கெட்களையும், M அபிஷேக் 3 விக்கெட்களையும், R டிலோஜன், S.ஹர்ஷா முத்துமினா, ராஜேந்திரகுமார் ருகேஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணி 23 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் R டிலோஜன் 17 ஓட்டங்களையும், B தாருஜன் 15 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் T கஜநாத் 5 விக்கெட்களையும், தரணீசன் 3 விக்கெட்களையும், பரத்துவசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பலோவ் ஒன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணி 80.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இதில் டிலுக்ஸன் 72 ஓட்டங்களையும், N.நிருபன் 35 ஓட்டங்களையும், மிதுஷிகன் 16 ஓட்டங்களையும், B.தருஜன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் T.கஜானாத் 06 விக்கெட்களை கைப்பற்றினார். தரணீஷன் 04 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 12.2 ஓவர்களில் 01 விக்கெட்டினை இழந்தது 38 ஓட்டங்களை பெற்றது. சுபநாதன் அர்ஜுன் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். தேஷ்கர் 01 விக்கெட்டினையும் கைப்பற்றினார்.