வவுனியாவில் கொல்லப்பட்டவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்?

அண்மையில் வீடு புகுந்த ஒரு கும்பலினால் வெட்டியும், எரித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் வவுனியாவில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட அதேவேளை அவரின் கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.

இவ்வாறான நிலையில் இறந்த நபர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் எனவும், ஆட்களை கடத்துவது, கப்பம் பெறுவது, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் செய்பவர் எனவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு இறந்த நபர் ஒருவரை அடிக்கும் வீடியோவையும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசேட பொலிஸ் குழுவொன்று கொழும்பிலிருந்து வவுனியா சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று வவுனியாவில் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இது போன்ற சம்பவங்கள் மற்றும் கொலை, கொள்ளை, வால் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் பலரும் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகள் உட்பட, வவுனியாவில் உயர் பதவிகளை வகிப்பவர்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் மர்மான முறையில் ஒரு குடும்பம் இறந்து போனது. குறித்த சம்பவத்துக்கும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் சிக்கல்கள் இருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

உரியவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளே காணப்படுகின்றன.

Social Share

Leave a Reply