சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து கடந்த 28.07 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் Takafumi Kadono அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதற்கு முன்னர் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமே ஒன்றுகூடியிருந்த நிலையில் இங்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கொரோனா காலத்தில் தங்கள் தொழிலை சரியாக மேற்கொள்ள முடியவில்லை என்பதையும்,கடந்த அரசாங்கத்தின் வினைத்திறனற்ற ஆட்சியின் காரணமாக நாடு வங்குரோத்தடைந்ததால், தங்களின் தொழில்கள் நஷ்டத்தை சந்தித்தன என்றும், இதனால் கடனை மீளச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடனை அடைப்பதற்கு சாதகமான வேலைத்திட்டத்தை வழங்குமாறும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குழுவினர் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
தற்போதைய அரசாங்கம் பாராட் சட்டத்தை அமுல்படுத்துவதால் தாம் உட்பட நாடளாவிய ரீதியில் பரந்து கிடக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் அநாதரவாகியுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இச்சந்திப்பிற்கு சமூகமளித்திருந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள், நீண்டகாலமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், முயற்சியாண்மைகள் எதிர்நோக்கும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதியுடன் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலைபேறான தீர்வுகளை வழங்குமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரிக்கை விடுத்தார்.