அஸ்வெசும திட்டத்திற்கு தகுதியற்றவர்களுக்கும் கொடுப்பனவு!

அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 3 இலட்சத்து 93 ஆயிரத்து 094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் நலன்புரி நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 8 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது முடிந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், தற்போது, தற்போது 1 கோடியே 7 இட்சத்து 92 ஆயிரத்து 265 குடும்பங்கள் நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் அவர்களில் 9,046,612 குடும்பங்கள் நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர் அந்த இலக்கை எட்ட முடியும் எனவும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இதுவரை சுமார் 10 இலட்சம் கணக்குகளின் விபரங்கள் நலன்புரிப் பலன்கள் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தகுதியுடையவர்கள் விரைவில் கணக்கை ஆரம்பித்து பலன்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதற்காக, பொது விடுமுறை நாட்களிலும் அரசு வங்கி அமைப்பு திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply