விடுதலைப் புலிகள் பௌத்தத்தை மதித்தனர் – பௌத்த மத தலைவர்கள்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று இன்று(21.08) வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இடம்பெற்றது. இவ் ஊடக சந்திப்பில் நான்கு மதத்தினை சேர்ந்த மதகுருக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடமானது தொல்பொருள் திணைக்களத்திற்குரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது என்றும், இது சகல மதத்தவருக்கும் சகல இனத்தவருக்கும் உரியது என்றும் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்குவதற்காகவும், இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த குறுந்தூர் மலைப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா?

அவ்வாறிருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்? என கேள்வி எழுப்பப்பட்டது.

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது. அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் இந்த ஊடக சந்திப்பில் புகழாரம் சூட்டினார்.

வணக்க ஸ்தலங்கள் சகல மதத்தவருக்கும் சகல இனத்தவருக்கும் உரியது. சிங்கள பெளத்தம் என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசியலுக்காக கதைக்கும் பைத்தியக்காரர்கள் பற்றி கவலை வேண்டாம் என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்தார். அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனரா என ஊடகவயலாளர் ஒஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

பைத்தியக்காரர்கள் அவ்வாறுதான் கதைப்பார்கள். அவர்கள் தொடர்பில் கவலை வேண்டாம். அவ்வாறானவர்கள் இங்கும் உள்ளார்கள் அங்கும் உள்ளார்கள். இவர்கள் தேர்தல் வருகிறது என்றால் கதைப்பார்கள். எனவே அந்த பைத்தியங்கள் தொடர்பல் கதைக்க தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply