சொப்பன சுந்தரி – அழகு சுந்தரி

சொப்பன சுந்தரி திரைப்படம் இன்று(25.08) இலங்கை முழுவதும் வெளியாகியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி நேற்று(24.08) கொழும்பு சவோய் 3D திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்து. இலங்கை திரைப்படம் ஒன்று மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இலங்கை திரைப்படங்களை இந்திய திரைப்படங்களுடன் ஒப்பிட முடியாது. ஆனால் இந்த திரைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த திரைப்படத்தின் திரைக்கதை மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைப்படம் நகர்த்திச் செல்லப்படும் விதம் இந்திய திரைப்படங்களுக்கு ஈடு கொடுக்கும் முகமாக அமைகிறது. ஒரு மசாலா திரைப்படம் எப்படி மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமோ அதனை இந்தப் படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

சில படங்களே இரண்டாம் தடவை பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும். அல்லது படம் பார்த்தவுடன் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற மனநிலை மனதுக்குள் ஏற்படும். இந்தப் படத்தில் அது ஏற்படுகிறது.

இலங்கை நடிப்பு துறை மிகவும் சிறப்பாக முன்னேறி வருகிறது. குறிப்பாக தமிழ் நடிகர்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்த பல முகங்களை நடிகர்களாக பார்த்து இவர்கள் இந்தளவு சிறப்பாக நடிப்பார்களா என பிரமித்து போகும் அளவுக்கு நடித்துள்ளனர். நடிப்பு துறையில் ஆர்வமுள்ளவர்களை சரியாக கணித்து களமிறங்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

குறிப்பாக தயாரிப்பாளர், நடிகர் கஜானன் மற்றும் இயக்குனர் நடிகர் மாதவன் ஆகியோர் இயற்கையில் மிகவும் சாந்தமான மென்மையான குணம் படைத்தவர்கள். ஆனால் மாதவன் திரையில் மிரட்டியிருக்கும் விதம், கஜானன் செய்திருக்கும் வித்தைகள் மற்றும் குறும்புகள் நினைத்து பார்க்க முடியாதவை. ரசிக்க வைத்துள்ளார்கள். ஹட்ஸ் ஒப். (Hats Off)

இந்த திரைப்படத்தை இறுதிவரை சுவாரசியம் ககுன்றாது கொண்டு செல்லும் மூன்று ஓட்டுனர்கள்(Drivers) இறுதிவரை ரசிக்க வைக்கிறார்கள். அட பாவிகளா என்று சொல்ல தோன்றுகிறது.

இந்த திரைப்படத்தின் இசைமைப்பாளர் ராம் மிக அபாரமாக கலக்கியுள்ளார். இந்திய திரை பின்னணி இசைக்கு எந்தவிதத்திலும் சோடை போகவில்லை. மிக அபாரம். உண்மையில் இந்திய இசைக்கு நிகராக உள்ளது. பாடல்களை அமைத்து விதம், தமிழ் சினிமாவின் ஹிட் பாடல்களை பாவித்த விதம் ரசிக்க வைக்கிறது. இந்த இசையமைப்பாளர் பல வெற்றிப்படிகளை தொடுவர் என மிகவும் நம்பலாம்.

டப்பிங் மற்றும் இசைக்கலவை கன கச்சிதமாக அமைந்துள்ளது. இந்தளவு தெளிவினை இந்திய தமிழ் படங்களில் கேட்பது கடினம். இது எவ்வாறு இவர்களினால் சாத்தியமானது என்ற கேள்வி எனக்குள் மீண்டும் மீண்டும் வந்து போகிறது. அந்தளவுக்கு தெளிவு மற்றும் நேர்த்தி காணப்படுகிறது.

கமரா மிகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. கொழும்பின் அழகை, வெள்ளவத்தையினை இப்படியும் காட்டலாமா என நானே வியந்து போனேன்.

ஒட்டு மொத்தத்தில் அதிகமாக எழுவதிலும் பார்க்க நீங்களே இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள். வெளியே வரும் போது முழு திருப்தியான படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்திய திரைப்படங்களில் நாம் தேடி பல குறைகளை பிடிப்போம். இது புதியவர்களின் முயற்சியில் உருவாகியுள்ள நம்ம படம். பிழைகளை பிடிக்காமல் விடுவோமோ என்று நினைப்பவர்கள் பிழைகளை பிடிக்கலாம். தூக்கி திரியலாம். ஆனாலும் இது எம்மவர் படைப்பு. இதனை இந்திய திரைப்படங்களோடு ஒப்பிடாமல் நம் திரைப்படமாக பார்க்க வேண்டும்.

இந்த திரைப்படம் 7 வருட உழைப்பு என ஆரம்ப நிகழ்வில் கூறப்பட்டது. உழைப்புக்கு நிச்சயம் ஊதியம் கிடைக்கும். இலங்கையில் கடந்த காலங்களில் வெற்றி படங்களை தந்த குழுவினர் இப்போது எங்கே போய்விட்டார்கள் என்ற நிலை காணப்படுகிறது. இந்த குழுவும் அப்படி போகாமல், இந்த திரைப்படத்துக்கு, 7 வருட உழைப்புக்கு உங்களுக்கு மிகவும் சிறந்த பதில் கிடைத்துள்ளது. மிக விரைவில் அடுத்த பட தயாரிப்புக்கு களமிறங்குங்கள் என எனது வி மீடியா தமிழ் மற்றும் சிங்கள ஊடகம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரையரங்கு விபரம்
வெள்ளவத்தை சவோய் 3D
தெஹிவளை – கொன்கோர்ட்
கொழும்பு – PVR சினிமா
தெமட்டகொடை – ரீகல்
யாழ்ப்பாணம் – ரீகல்(கார்கில்ஸ்)
திருகோணமலை – நெல்சன்
வவுனியா – அமுதா
கல்முனை – GK சினிமக்ஸ்

ச.விமல்
பணிப்பாளர்
வி மீடியா

சொப்பன சுந்தரி - அழகு சுந்தரி

Social Share

Leave a Reply