ஆளும் பொதுஜன பெரமுன அரசுக்குள் முறுகல் நிலை அதிகரித்து செல்கிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியது தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் நேரடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதிலும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோர் தாங்கள் போராட்டத்துக்கு களமிறங்கவும் தயார் என்ற நிலையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இலங்கை மின்சார சபையின் 52 ஆவது வருட நிறைவு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மின்சார துறை அமைச்சர் காமினி லொக்குகே கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
“குறித்த அமைச்சர்கள் இன்றி அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன” என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்புகளும் பரஸ்பரம் பொது வெளியில் தங்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருவது தற்போது ஆளும் அரசுக்கான ஆரோக்கியமன நிலை இல்லை என்பதுவே அரசியல் அவதானிகளின் கருத்து.
ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.