மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!

போட்டிப் பரீட்சையான உயர்தரப் பரீட்சைக்கு பிள்ளைகள் அதிக எதிர்பார்ப்புகளுடன் தோற்றுகின்றனர். இருப்பினும் 2023 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கு தோற்றும் பிள்ளைகள் கடுமையான அநீதியை எதிர்கொண்டுள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்று (05.09) நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இவர்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினாலும் தாமதமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,உயர் பணவீக்கம்,எரிபொருள் பிரச்சனை,மின்சார பிரச்சனை போன்றவற்றாலும் அவர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும்,இதன் காரணமாக,கற்கைக் காலம் குறைவடைந்துள்ள நிலையில் தங்கள் வசதிக்காக,உயர்தர பரீட்சையை முன்கூட்டியே நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதனால் பிள்ளைகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இம்மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்திய அவர், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதப்பட வேண்டும் என்றும், 6 தவனைப் பரீட்சைகளை முடிந்திருக்க வேண்டும் என்றாலும் இதுவரை 4 தவனைப் பரீட்சைகளே முடிந்துள்ளன என்றும், சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக பாடத்திட்டம் கூட முழுமையடையாதுள்ளதாக தெரிவித்த அவர், இது பாரிய அநீதி எனவும்,இது பாடசாலை மாணவர்களின் மனித உரிமை மீறல் எனவும் கூறினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவையாக தோற்றும் பரீட்சாத்திகளுக்கும் இதனால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதெல்லாம் பிள்ளைகளது தவறு அல்ல,கல்வி அமைச்சின் திறமையின்மையே காரணம் என்றும்,மதிப்பெண்களை சரிபார்க்கும் செயற்பாடுகள் முறையாக இடம்பெற்றிருந்தால் இவ்வாறானதொன்று நடந்திருக்காது என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply