இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கான ஒளிபரப்பு உரிமத்தை கப்பிடல் மகாராஜா நிறுவனத்தின் MTV நிறுவனம் பெற்றுள்ளது.
இலங்கை விளையாட்டில் தாம் தொடர்ச்சியாக பங்கு வழங்கிவரும் நிலையில், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ண உரிமத்தை தாம் பெற வேண்டுமென கடுமையாக போராடி பெற்றுக் கொண்டதாக இன்று(07.09) கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவோன் டானியல் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல உலகக்கிணங்களை ஒளிபரப்பு செய்த மகாராஜா நிறுவனம் இம்முறையும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்து வருவதாகவும், தற்போது ஆசிய கிண்ண தொடரை ஒளிபரப்பு செய்வதாகவும், நாளை(08.09) முதல் ரக்பி உலகக்கிண்ணத்தை ஒளிபரப்பு செய்யவுள்ளதாகவும், அது சென்று கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் உலகக்கிண்ண ஒளிபரப்பையும் தாம் செய்யவுள்ளதாக MTV பிரதம நிறைவேற்று அதிகாரி சுசர டினால் தெரிவித்தார். அத்தோடு சர்வதே கிரிக்கெட் சம்மேளனத்தின் விதிமுறைக்கு அமைவாக போட்டியை முழுமையாக நேர்த்தியாக தாம் ஒளிபரப்பு செய்வோம் என உறுதியளித்த சுசர டினால் கடந்த T20 உலகக்கிண்ண தொடரின் போது சிறந்த ஒளிபரப்பு செய்த முதன்மை நிறுவனமாக நற் பெயரை சர்வதேசக் கிரிக்கெட் சம்மேளனத்திடம் தாம் பெற்றுக் கொண்டதாகவும், அது தமது நிறுவனத்துக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நற்பெயரை பெற்று தந்ததாகவும், அந்த பெயரை இம்முறையும் காப்பாற்றுவோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மகாராஜா நிறுவனம் இன்று நேற்றல்ல பல வருடமாக விளையாட்டு துறைக்கு பங்காற்றி வருவதாக தெரிவித்த இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா, மறைந்த கப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைவர் ராஜா மகேந்திரன் இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவராக காமினி திஸ்ஸநாயக்காவின் காலத்தில் கடமையாயற்றியதனையும் நினைவு கூர்ந்தார். அவர்களது சேவை கிரிக்கெட்டுக்கு தொடர்வதாகவும், இந்த ஒளிபரப்பை திறம்பட செய்ய இலங்கை கிரிக்கெட்டின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.
-விமல்-