“மணி மாஸ்டர்”திருக்குறள் மனனப் போட்டி மன்னார் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கடந்த 07 ஆம் திகதி, வியாழன், பிற்பகல் 1.45 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது,மணி மாஸ்டர் என்பவரின் புதல்வரும், பொறியியலாளருமான திரு.விமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த போட்டியானது 4 பிரிவுகளில் நடாத்தப்பட்டு முதல் இடத்தை பெற்ற மூன்று போட்டியாளர்களுக்கு தலா 50,000 ரூபாவும், 2 ஆம் இடத்தை பெற்ற மூன்று போட்டியாளர்களுக்குத் தலா 30,000 ரூபாவும், 3 ஆம் இடத்தை பெற்ற மூன்று போட்டியாளர்களுக்கு தலா 20,000 ரூபாவும், பாடசாலைக் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஏனைய போட்டியாளர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் பணப்பரிசில் வழங்கப்பட்டதோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தப் போட்டியாளர்களின் பணப்பரிசிலில் ரூபாய் 7,500 வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டு வங்கிப்புத்தகம் கையளிக்கப் பட்டதோடு, மிகுதிப் பணம் மாணவர்களின் கையில் வழங்கி வைக்கப்பட்டது.
மணி மாஸ்ரர் மற்றும் அவரது நான்கு புதல்வர்களும் இணைந்து 10 லட்சம் ரூபா பணத்தை வழங்கி குறித்த பரிசளிப்பு விழாவை நடத்தியமை மாணவர்களையும், பெற்றோரையும் பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கி இருந்ததோடு, தமிழ்மொழியை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் அந்தக்குடும்பத்தினரது இந்தச் செயற்பாடானது மக்களின் மத்தியில் மிகுந்த பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி G,Dதேவராஜா, மடு வலயக்கல்வி பணிப்பாளர், திருமதி A,K வொலன்ரைன், மன்னார் உதவி வலயக்கல்வி பணிப்பாளர் K,மனோரஞ்சன், மடு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் S.கலா வண்ணன் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை,வழங்கி வைத்தனர்.
விழாவின் இறுதி நிகழ்வாக மணி மாஸ்ரர், மற்றும் அவரது பாரியாரிடம் மாணவர்கள், ஆசி பெற்றுச் சென்றனர்.
-ரோகினி நிஷாந்தன்-
மன்னர் செய்தியாளர்