இலங்கை அணிக்கு வெற்றி – இலங்கை – தென் ஆபிரிக்க ஒரு நாள் தொடர்

இலங்கை,தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 1-0 என 3 போட்டிகள் அடங்கிய தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 118 (115) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இது அவரின் மூன்றாவது சதமாகும். சரித் அசலங்க 72 ( 62) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 44(62) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் தென் ஆபிரிக்கா அணி சார்பாக கிகிஸோ றபாடா 2 விக்கெட்களையும், கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 பெற்றுக் கொண்டது. இதில் எய்டன் மார்க்ராம் 96(90) ஓட்டங்களையும், ரசி வன் டேர் டுஷேன் 59(59) ஓட்டங்களையும் பெற்றனர். தென்னாபிரிக்கா அணியின் தலைவர் ரெம்பா பவுமா உபாதை காரணமாக 38 ஓட்டங்களோடு மைதானத்தை விட்டு வெளியேறியமை தென்னாபிரிக்கா அணியின் பின்னடைவுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்செய 2 விக்கெட்களையும், வனிது ஹசரங்க, பிரவீன் ஜெயவிக்ரம, சமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டியின் நாயகனாக அவிஷ்க பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி 04 ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணிக்கு வெற்றி - இலங்கை - தென் ஆபிரிக்க ஒரு நாள்  தொடர்

Social Share

Leave a Reply