2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பிற்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று (21.09) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ‘சோனிக் சோனிக்’ என அடையாளம் காணப்பட்ட நபர் உண்மையில் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புலனாய்வு அதிகாரியே என தெரிவித்தார்.
மேலும், “இந்த உளவுத்துறை அதிகாரி திறமையாக பயங்கரவாத வலையமைப்பில் நுழைந்து அரசாங்கத்திற்கான முக்கிய தகவல்களைப் பிரித்தெடுத்தத்து, தீவிரவாதி போல் காட்டிக்கொண்டு தீவிரவாதிகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டும், பொலிஸ் அதிகாரியாகக் காட்டிக் கொள்ளக் கூடாது,” என்றார்.
பயங்கரவாத வலையமைப்புக்குள் பிரவேசிக்கும் உத்தியோகத்தர்களுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு மேலும் பல இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பதில் அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
மேலும், இதற்கு வேறு வழியில்லை எனவும், இதை பாராளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், இதை அரசியல் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் முயற்சிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு நாடு முனைந்திருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான பணிகளில் ஈடுபடுமாறு அவர்களை எவ்வாறு கோர முடியும் எனவும் இதன்போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு மூளையாக செயற்பட்ட சஹாரான் மற்றும் அவரது குழுவினரின் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திய இணைய தளங்களுடன் “அடு ஹிந்த்” என்ற பெயர் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
“சஹாரான் அவரது குழுவினரும் தங்கள் செயற்பாடுகளுக்கு இணையத்தளங்களைப் பயன்படுத்தினர். இந்த ‘அடு ஹிந்த்’ என்பது ஒரு சர்வதேச புலனாய்வு அமைப்பால் தீவிரவாதிகளின் குழுவுடன் தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பெறவும் பயன்படுத்தப்பட்ட புனைப்பெயர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய ‘சோனிக் சோனிக்’ மற்றும் ‘அடு ஹிந்த்’ என்ற குறியீட்டு பெயர்கள் குறித்து சமீபத்தில் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டதை அடுத்தி இது குறித்த தெளிவுபடுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.