இலங்கை கிரிக்கெட் அணி சரியான பாதையில் செல்கிறது

இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்துக்கும், தெரிவுக்குழுவினருக்கும் இடையில் கடந்த 20 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் இலங்கை அணி உரிய பாதையிலும், உலகக்கிண்ணத்துக்கு ஏற்ற வகையிலும் செல்வதாகவும்ம், உலகக்கிண்ண தொடரில் இலங்கைக்கு நற்பெயரை அணி பெற்று தருமென ஒருமித்த கருத்தை வெளியிட்டதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடருக்கான ஆய்வுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, பயிற்றுவிப்பாளர் க்ரிஸ் சில்வர்வூட், பயிற்றுவிப்பாளர் ஆலோசகர் மஹேல ஜெயவர்தன, அணி முகாமையாளர் ஹேமந்த விக்ரமரட்ன ஆகியோரும் தெரிவுக்குழுவினர் சார்பாக அதன் தலைவர் ப்ரமோதைய விக்ரம்சிங்க, உறுப்பினர்களான ரொமேஷ் களுவித்தாரன, ஹேமந்த விக்ரமரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை அணி ஆசிய கிண்ண தொடரில் விளையாடிய விதம் மற்றும் இறுதிப் போட்டி வரை முன்னேறியது தொடர்பில் பேசப்பட்ட அதேவேளை, இறுதிப் போட்டியில் விளையாடிய விதம் மற்றும் அதே போன்று மீண்டும் விளையாடக்கூடாது போன்ற விடயங்களும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத்துக்கான அணி சரியாக இருப்பதாகவும், தெரிவு மற்றும் தேவை ஏற்பட்டால் செய்யவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவுக்குழுவினர் குறித்த கூட்டத்தில் தெரிவித்ததாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply