அவுஸ்திரேலியா அணியை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் டேவிட் வோர்னர் 52 ஓட்டங்களையும், ஜோஷ் இங்கிஸ் 45 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 41 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்து வீச்சில் மொஹமட் ஷமி 5 விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியின் ஆரம்ப இணைப்பாட்டம் மூலமாக இந்தியா அணியின் வெற்றி இலகுவானது. ருத்துராஜ் ஹெய்க்வூட், சுப்மன் கில் ஆகியோர் 142 ஓட்டங்களை பெற்றனர். ஹெய்க்வூட் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா அணி தடுமாற்றம் கண்ட வேளையில் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைச்சதங்களை பெற்று வெற்றியினை இலகுபடுத்தினர். ராகுல் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், சூர்யா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அடம் ஷம்பா 2 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ், சீன் அப்போட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்தியா அணி முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு வழங்கிய நிலையில், பலமான அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply