புலனாய்வு துறை சம்மந்தப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பேசுவது சரியான நடவடிக்கை அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதானியும் பாரளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன நேற்று(22.09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விவாதத்தில் தெரிவித்துள்ளார். புலனாய்வு துறையின் வெற்றி,தோல்விகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது விவேகத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தனது உரையில் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புணர்வுடன் இவ்வாறான விடயங்களை கையளவேண்டுமென கூறிய வஜிர அபேவர்தன, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எம்மை பார்த்து சிரிக்கும் நிலைமைக்கு சென்றுள்ளோம் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளான இந்தியாவின் ரோ, அமெரிக்காவின் CIA, இஸ்ரேலின் மொஸாட், பாகிஸ்தானின் ISI, அவுஸ்திரேலியாவின் ASIS தொடர்பில் எந்தவித தகவலும் எவருக்கும் தெரியாது எனவும் மேலும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல்களின் போது ஜேர்மனி, இஸ்ரேல் பாராளுமன்றங்கள் நடந்துகொண்டது போல இங்கேயும் நடந்து கொள்ள வேண்டுமென கூறிய அவர், பயங்கரவாதத்தின் சகலவித வெளிப்பாடுகளுக்கு எதிராகவும் போராடவேண்டுமென கூறினார்.