வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்திய குழு கூடி ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சட்டமூலங்களும் மனித சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கடுமையாகப் பாதிப்பதால் அவற்றை நிறைவேற்றக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விரு சட்டமூலங்களின் உள்ளடக்கங்களும் சட்டமாக மாறினால் இந்நாட்டு மக்களின் உரிமைகள் முற்றாக நசுக்கப்படும் என்றும் அதனால்தான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாகவும் கௌசல்ய நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.