கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத் தருமாறு கோரி இன்று (24.09) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ரங்கன் குடியிருப்பு பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர பாதையில்லாமல் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக பல அரச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும், தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதைக்கு தடையாக உள்ள காணி உரிமையாளர் இப்பகுதி மக்களின் நலன் கருதி வீதிக்கான காணியினை வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்பொழுது காணியினை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக வீதி ஊடாக இரவு வேலைகளில் பெரும் அச்சநிலையில் செல்லவேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.