அச்சுறுத்தல்கள் இல்லாத நீதி முறைமை அவசியம் – ஜீவன்

அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றிய நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும், குருந்தூர்மலையில் உத்தரவு பிறப்பித்த பிறகு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களால் உந்தப்பட்டு அவர் வெளியேறியது நமது நீதித்துறையின் நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது எனவும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு எதிரான எந்த அச்சுறுத்தலும் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. அச்சமின்றி நீதி வழங்குபவர்களைப் பாதுகாப்பதும் ஆதரவளிப்பதும் அனைவரது கூட்டுப் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் குரல்களுடன் தாமும் இணைவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வந்து, குருந்தூர்மலை வழக்கில் மட்டுமல்ல, நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் இந்த பிரச்சினையை அமைச்சரவையில் எழுப்பி ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரையாட உள்ளதாகவும், தேவையற்ற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்கள் இல்லாத நீதி முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply