சர்வதேச கிரிக்கெட் இணைப்புக்குழு நியமனம்.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு, இலங்கை விளையாட்டு துறை அமைச்சுக்குமிடையிலான இணைப்புகள் மற்றும் தொடர்பாடல்களை மேற்கொள்ளவதற்காக சர்வதேச கிரிக்கெட் இணைப்புக்குழு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக கடமையாற்றியவருமான சிதார்த் வெத்துமுனி நியமிக்கப்பட்டுளளார். செயலாளராக ரபித நிர்மலா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உப்பாலி தர்மதாச உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களது நியமனம் தொடர்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரிக்கு அமைச்சர் இந்த நியமனம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐ.சி.சி கு எழுதியுள்ள கடிதம் கீழுள்ளது.

“இலங்கை கிரிக்கெட்டில் பண மோசடி நடைபெற்றுள்ளமை கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது. இவ்வாறன குழப்பமான நிலையில் இந்த விடயங்கள் தொடர்பான விடயங்களை தங்களுக்கு அறியப்படுத்த ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ளேன்.

இலங்கை விளையாட்டு அமைப்புகள் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் (திருத்தப்பட்டது) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் மக்களுக்கு நான் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளேன். நமது குடியரசின் பெயரைத் தாங்கி, இலங்கையின் தலைசிறந்த தேசிய விளையாட்டு அமைப்பாக இயங்கி வரும் இலங்கை கிரிக்கெட்டின் நடவடிக்கைகளை
மேற்பார்வையிடுவது எனது பொறுப்பு. மேலும், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளுக்கு அமைய இதுவரை இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக செயற்பாடுகளிலோ, நடவடிக்கைகளிலோ நான் இதுவரை தலையிடவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட்டின் நிலை மற்றும் இலங்கை கணக்காய்வாளர் நாயக
திணைக்களத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, ஊழலை ஒழிக்க அரச சட்டங்கள் மற்றும் தற்போதைய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் ஊழலற்ற கொள்கைக்கு இதற்கு ஒத்துப்போவதாக நான் கருதுகிறேன்.

இலங்கை கிரிக்கெட்டினால் செய்யப்பட்ட ஊழல்களையும் அதற்காக பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு தெரியப்படுத்த நியமிக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்பான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு, தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தனது ஆதரவை வழங்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டுகிறேன்.

இலங்கை கிரிக்கெட்டுக்கான நிதி ஐசிசியால் வழங்கப்படும் நிலையில், நிதி விவகாரங்கள் தவறாகக் கையாளப்பட்டு அப்பட்டமான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தாங்கள் ஆர்வம் காட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக, இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவத்தை நிறுத்துவது தொடர்பிலான உங்கள் முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அத்தோடு நேரடியாக ஒரு கலந்துரையாடலில் ஈடுபடுவதன் மூலம் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நோக்கங்களுக்கும் ஒரு தடையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்”

என விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply