ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் தடை நீக்கம் தொடர்பில் பேசுவேன்- ஷம்மி சில்வா.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்க கோரி சர்வதேசக் கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்குள் அரசாங்கத்தின் தலையீடு இருக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினால் மட்டுமே தான் பேசுவேன் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால், இந்தியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தான் சர்வதேசக் கிரிக்கட் பேரவையுடன் பேசி ஒரு தீர்வை பெற முடியுமென கூறினார்.

இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமயகத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் இந்த கருத்தை அவர் முன்வைத்தார். கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி வந்த நிலையியிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தான் கூறியே இந்த தடை விதிக்கப்பட்டது என கூறுகிறார்கள். அவ்வாறாக இருந்தால் சர்வதேச ரீதியில் நான் எந்தளவு பெரியவர் என அவர்கள் யோசித்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

விளையாட்டு துறை அமைச்சர் தம் மீது கூறிய போலியான குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் கேட்டுக்கொன்டு தம் மீது கள்வர்கள் என குற்றம் சுமத்துவதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகையினை கூட வாசித்து தெரிந்து கொள்ள முடியாதவர்களா பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

பாரளுமன்றத்தில் அனேகமானவர்களை தனக்கு தெரியுமெனவும், பலருடன் தான் மது அருந்தியுள்ளேன் எனவும் தெரிவித்த ஷம்மி சில்வா தனக்கு அரசியல் தெரியாது எனவும் தனக்கு அதில் ஈடுபாடில்லை எனவும் அரசியலுக்காகவே ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதாகவும் மேலும் அவர் குற்றம் சுமத்தினார்.

கள்வர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபடுவர்கள், பாதாள உலகத்தினருடன் தொடர்புள்ளவர்கள் என அமைச்சரும் பாராளுமன்றத்தில் உள்ளவர்களும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் எமது நிர்வாகத்தில் எவரும் அவ்வாறில்லை என மறுப்பு தெரிவித்த ஷம்மி சில்வா, பொலனறுவையிலிருந்து பாதாள உலக தொடர்புகள் இன்றி அமைச்சர் ரொஷான் ரணசிங்க எவ்வாறு பாராளுமன்றத்துக்கு தெரிவானார் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களே பாதாள உலக தொடர்புகளை கொண்டவர்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தடை காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான வருமான இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த ஷம்மி சில்வா, 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் மாநாடு, 2027 ஆம் ஆண்டு மகளிர் உலகக்கிண்ணம், 2026 ஆம் ஆண்டு T-20 உலகக்கிண்ணம் இந்தியாவுடன் இணைந்து நடாத்துவது என்பன இலங்கையில் நடாத்த நாம் கடுமையாக போராடி பெற்றுள்ளோம். இவை யாவும் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஏற்பாடுகளுக்கு நாட்டுக்கு வந்திருந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திருப்புவதாக இருந்த போதும், இந்த தடையை தொடர்ந்து நாட்டை விட்டு திரும்பி சென்றுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

மழைக்கு கூட ஓட தெரியாத விளையாட்டு அமைச்சருடன் விளையாட்டு தொடர்பில் எவ்வாறு பேச முடியுமென கேள்வியெழுப்பிய ஷம்மி சில்வா, விளையாட்டு அமைச்சரினாலேயே இலங்கையின் விளையாட்டு துறை பின்னடைவை சந்தித்து வருகிறது எனவும் மேலும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சங்கத்துக்கு தான் வர முன்னர் அர்ஜுன ரணதுங்க இருந்தார். அவரின் தம்பி நிஷாந்த ரணதுங்க செயலாளராக இருந்தார். உலகக்கிண்ணத்தை நடாத்திய நாடக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை நஷ்டமடைந்த அமைப்பாக விட்டுச் சென்றனர். அவற்றிலிருந்து மீட்டு எடுத்தவர்கள் நாங்கள். இங்கு நாம் கொள்ளையிட வரவில்லை. நான் பிறக்கும் போது 60 வருடங்களுக்கு முன்னர் எனது தந்தையிடம் நான்கு கார்கள் காணப்பட்டன. கொள்ளையடிக்கிறோம் என கூறும் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் முகங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டுமெனவும் கூறினார்.

Social Share

Leave a Reply