இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு இடம்பெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவரான இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் கட்சி மாநாடு தொடர்பில்; பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் புதிய தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
மேலும், போட்டி இல்லாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்ட நிலையில்“பெயர் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒரு நாள் அவகாசம் கோரினர்.
இதற்கமைய, இணக்கப்பாட்டுடனோ அல்லது கட்சி யாப்பின் பிரகாரமோ புதிய தலைவர் தேர்வு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மாதிவெல விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள்; எட்டப்படாத நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.