ஏயுவு வரி விதிப்பால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்தி கடலில் விருந்துபசார கொண்டாடியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதியும் வழங்கியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் துறைமுகத்தில் உள்ள உணவகத்திலிருந்து உணவு குடிபான வகைகளுடன் நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக் எரிபொருளை விரயம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் விருந்துபசாரங்களை நடாத்துவது பிரச்சினையல்ல என்றாலும்,அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருந்துக்கு சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டதாகவும்,இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் ஆட்சேபனை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.