2024 ஜனவரி 26ஆம் திகதி இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் அத்தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி 24 ஆம் திகதியன்று இந்திய சாஸ்திரீய நடனங்களின் சங்கமமான சிருங்காரம் நடன நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்த்தன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

எட்டு இந்திய சாஸ்திரிய நடன வடிவங்களையும் சிருங்காரம் அரங்கேற்றியிருந்தது. இதில் நான்கு ஆற்றுகைகள் இந்திய கலாசாரப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கலைஞர்கள் வழிகாட்டலில் இடம்பெற்றிருந்ததுடன் நம்ரதா மேஹ்தா தலைமையில் அவரது அணியினரான சித்தி வைகர், நமஹா மயூம்தர், அநுராதா சங்வி, த்ருவி ஜெய்ன் ஆகியோர் ஒடிசி நடனத்தையும் ரெஞ்சிஸ் நாயர் கதகளி, பூர்பிதா
முகெர்ஜி மணிபூரி , சதாப்தி போராஹ் சத்ரியா நடனத்தையும் வழங்கிய நிலையில் ஏனைய நான்கு வடிவங்களான பரத நாட்டியம் தனுக தக்ஷித் சமரவீர, மோகினியாட்டம் நிஷாலி சில்வா, கதக் வெரோனிக்கா தசநாயக்கா, மற்றும் குச்சுப்புடி தக்ஷாயினி கமலநாதன் ஆகிய இலங்கை கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டிருந்தது. அத்துடன் இந்நடன நிகழ்வுக்கு கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய
மாணவிகளின் ஆற்றுகை மேலும் மெருகூட்டியிருந்தது. இந்தியா இலங்கை ஒன்றிணைந்த இந்த ஆற்றுகை இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசர பிணைப்பின் சிறப்பினை எடுத்தியம்பியிருந்தார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய நடன கலைஞர்கள் அடுத்துவரும் சில நாட்களில் நாடளாவிய ரீதியில் பயணித்து கண்டி, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடன நிகழ்வுகளை அரங்கேற்றவுள்ளனர்.