சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் இன்றியமையாதது எனவும் கொள்கை உருவாக்கத்தில் மனித வளத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தாலும், கொள்கைகளை உருவாக்கும் சபைகளில் சுற்றுச்சூழல், வனம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வனவிலங்குகள் மற்றும் சுற்றாடல் தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மாறா தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டத்தின் தேவையும் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“மனிதர்கள் போலவே அனைத்து விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை உள்ளது,ஆனால் தற்போது காடுகள், நிலம், ஏரிகள், அணைகள், ஆறுகள் மற்றும் கடலை அண்மித்த பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக சுற்றுச்சூழல் வளம் சுருங்கி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு குறித்து முறையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் தரவுகளால் உறுதிப்படுத்தக்கூடிய தீர்மானங்கள் இங்கு எடுக்கப்பட வேண்டும் இதில்,பயிர் சேதங்களுக்கான இழப்பீடு மற்றும் காப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
யானை மனித மோதலால் மனித வளம் இழக்கப்படும்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறைவானதாக காணப்படுகிறது. தெளிவாக, இந்த மோதலில் வீடுகள் சேதமடையும் போது, அதை நிர்வகிக்கும் திட்டம் பலவீனமாக உள்ளதால் இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தேசிய நில பயன்பாட்டுத் திட்டம் சரியான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.
உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் 250 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், புதிதாக 52 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளமையினால் இது பறவைகளின் நடமாட்டத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, இந்த மின் உற்ப்பத்திக்கான இடத்தை மாத்திரம் மாற்றியமையுங்கள்.இந்த பகுதி 30 நாடுகளில் இடம்பெயரும் 250 வகையான பறவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால இடப்பெயர்ச்சி பிரதேசமாகும்.
இந்தப் பகுதியில் பறவைகளுக்கான இடம்பெயர்வு பாதையொன்று உள்ளதால், இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். ”