நிசங்கவின் நிதனமான ஆட்டத்தில் வென்றது இலங்கை – தொடர் சமநிலையில்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றிப் பெற்றுள்ளது.

287 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

பங்களாதேஷின் சட்டக்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் குசால் மென்டிஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். 

இந்த போட்டிகான இலங்கை அணியில் தீக்‌ஷனவிற்கு பதிலாக துனித் வெல்லலகெவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்காதேஷ் அணி சார்பில் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டவ்ஹித் ஹ்ரிடோய் (Towhid Hridoy) ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் முதல் ஓவரிலேயே டில்ஷான் மதுஷங்க, லிட்டன் தாஸின் விக்கெட்டை கைப்பற்ற, பின்னர் ஜோடி சேர்ந்த சௌமியா சர்கார் மற்றும் அணித் தலைவர் ஷான்டோ இணைப்பாட்டமாக 75 ஓட்டங்களை குவித்தனர்.

ஷான்டோ 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் டில்ஷான் மதுஷன்கவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

பின்னர், வனிந்து ஹசரங்க ஒரே ஓவரில் சௌமியா சர்கார் மற்றும் முஹமதுல்லாவின் விக்கெட்டுக்களை கைப்பற்ற, போட்டி இலங்கை அணிக்கு சதகமாக மாறியது.

பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்கள் பிராகசிக்க தவறியதுடன், இனிங்ஸின் இறுதியில் டவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் பங்களபதேஷ் அணி 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

வனிந்து ஹசரங்க 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடதக்கது. 

287 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

பத்தும் நிசங்க மற்றும் அசலங்க இருவரும் 4வது விக்கெட்டிற்காக 185 ஓட்டங்களை இணைப்பாட்டத்தின் ஊடாக பெற்று இலங்கை அணிக்கு நம்பிக்கையளித்தனர்.

பத்தும் நிசங்க 114 ஓட்டங்களுடனும், அசலங்க 91 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, துனித் வெல்லாகெவுடன் ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்க இலங்கை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்பில் சதமடித்த பத்தும் நிசங்க போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றிப் பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை வெற்றியீட்டியதன் காரணமாக தொடர் சமநிலையில் உள்ளது.

தொடரின் தீர்மானமிக்க மூன்றாவதும் இறுதியுமான போட்டி, எதிர்வரும் 18ம் திகதி நடைப்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply