2024ஆம் ஆண்டிற்கான தேசிய கலப்பு ஓட்டப் போட்டியில் மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன.
விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடாத்தும் 48வது தேசிய விளையாட்டுப் போட்டியின் மற்றுமொரு அங்கமாக கலப்பு ஓட்டப் போட்டி(10 கி.மீ.) நுவரெலியா கோல்ப் மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
நான்கு வருடங்களின் பின்னர் இம் முறை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டியில், ஆண்கள் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 79 வீரர்களும், மகளிர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில், முதலாம் இடத்தை மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.புஷ்ப குமார பெற்றுக் கொண்டார்.
போட்டியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே, மத்திய மாகாணத்தை சேர்ந்த வீ.வக்ஷானும், ஊவா மாகாணத்தை சேர்ந்த டி.எம். எரந்த தென்னகோனும் பெற்றுக் கொண்டனர்.

மகளிர் பிரிவில், முதலாம் இடத்தை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எச்.எம்.சி.எஸ்.ஹெரதா பெற்றுக் கொண்டார்.
மகளிர் பிரிவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த டபிள்யூ.ஏ.எம்.ஆர். விஜேசூரியவும், ஊவா மாகாணத்தை சேர்ந்த டபிள்யூ.எம். நிமேஷா நிதர்ஷனியும் பெற்றுக் கொண்டனர்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெமல் பெர்னாண்டோவினால் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
