தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்..!

இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரை பங்களாதேஷ் அணி 2 -1 என்ற ரீதியில் கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கு இடையிலான தொடரின் தீர்மானமிக்க இறுதி போட்டியில், பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதன் ஊடாக தொடரை கைப்பற்றியது. 

236 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. 

பங்களாதேஷ் சட்டகிராம் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

உபாதை காரணமாக இலங்கை அணியிலிருந்து விலகியிருந்த டில்ஷான் மதுஷங்கவிற்கு பதிலாக தீக்‌ஷன மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். 

இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியிருந்ததுடன், நிசாங்க, சதீரா மற்றும் அவிஷ்க ஆகியோர் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

சரித் அசலன்க 37 ஓட்டங்களுக்கும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜனித் லியனகேவுடன் இணைந்த தீக்‌ஷன 8வது விக்கெட்டிற்காக 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 

ஜனித் லியனகேவின் கன்னி சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

சௌமியா சர்க்காருக்கு களத்தடுப்பின் போது கழுத்தில் ஏற்பட்ட அடியின் காரணமாக, அவருக்கு பதிலாக தன்சித் ஹசன் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார். 

இருப்பினும், கனொளிகளில் பார்க்கும் போது சௌமியா சர்க்காருக்கு காலில் அடிப்பட்டதைப் போன்றே தென்படுவதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

236 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு தன்சித் ஹசன் 81 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். 

ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, முஷ்பிகுர் ரஹீம் 36 பந்துகளில் 37 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.  

பங்களாதேஷ் அணியின் ரிஷாத் ஹொசைன் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், நஜ்முல் ஹுசைன் சாண்டோ தொடரின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இன்றைய போட்டியின் போது பங்களாதேஷ் அணியின் சௌமியா சர்க்கார் உட்பட ஜாக்கர் அலி மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் உபாதை காரணமாக ஆடுகளத்தில் இருந்து வெளியேறியிருந்ததுடன், போட்டியின் நடுவராக செயற்படவிருந்த ரிச்சர்ட் கெட்டில்பரோவும் அதிக வெப்பநிலையின் காரணமாக போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. 

Social Share

Leave a Reply