யாழ். அணியை வீழ்த்தியது கண்டி..!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நடாத்தப்படும் 4 நாள் தேசிய சூப்பர் லீக் தொடரின் யாழ்ப்பாணம் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் இறுதி நாளான இன்று(24) 184 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அண்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கன்னிச் சதத்தை பதிவு செய்த, ஜனித் லியனகேவின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் யாழ்ப்பாணம் அணி முதல் இனிங்ஸிற்காக 261 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஜனித் லியனகே 137 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். கண்டி அணி சார்பில் நிம்சர அதரகல்ல மற்றும் வனுஜா சஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர். 

முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியிருந்தது. 

இருப்பினும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, அஹான் விக்கிரமசிங்க மற்றும் சாமிக்க கருணாரத்னவின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் கண்டி அணி 369 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கண்டி அணிக்காக அஹான் விக்கிரமசிங்க 149 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரத்ன  71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். யாழ்ப்பாணம் அணி சார்பில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக கைப்பற்றினார். 

108 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணம் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

யாழ்ப்பாணம் அணி சார்பில் நிபுன் கருணாநாயக்க 94 ஓட்டங்களையும் ரவிந்து பெர்ணான்டோ 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர் பந்துவீச்சில் ஆஷியன் டேனியல் மற்றும் வானுஜா சஹான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டனர். 

184 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.   

கண்டி அணி சார்பில் சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன இருவரும் அரை சதம் கடந்தனர்.  யாழ்ப்பாணம் அணி சார்பில் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 3 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக கைப்பற்றினார். 

இதேவேளை, தம்புள்ளை மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து  240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

தம்புள்ளை அணி சார்பில் சமிந்து விஜேசிங்க 51 ஓட்டங்களையும் லசித் குரூஸ்புள்ளே 43 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டனர். கொழும்பு அணி சார்பில் பந்துவீச்சில் நிசல தாரக மற்றும் இசித டியூ விஜேசுந்தர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கொழும்பு அணிக்காக கிரிஷன் சஞ்சுலா 49 ஓட்டங்களையும் தசுன் ஷானக 42 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

தம்புள்ளை அணி சார்பில் பந்துவீச்சில் முகமட் ஷிராஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

30 ஓட்டங்கள் முன்னிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ளை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. மினோத் பானுகா 83 ஓட்டங்களையும் நவீன் பெர்ணான்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

கொழும்பு அணி சார்பில் பந்து வீச்சில் நிசல தாரக மற்றும் நுவனிது பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர். 

இதன்படி கொழும்பு அணிக்கு 330 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் போட்டியின் இறுதி நாளான இன்று கொழும்பு அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ள போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. 

கொழும்பு அணி சாரபில் கிரிஷன் சஞ்சுலா 58 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார். 

Social Share

Leave a Reply