இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நான்காவது நாளான இன்று(25) 511 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியினால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன்படி, இந்த போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் சிலேட் மைதானத்தில் கடந்த 22ம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பின்னர், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், இருவரும் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.
கமிந்து மென்டிஸ் டெஸ்ட் போட்டியில் கன்னிச் சதத்தை பதிவு செய்ததுடன், தனஞ்சய டி சில்வாவும் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அணியின் ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி முதலாவது இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் காலீட் அகமட் மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது இனிங்கஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்கள், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
92 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க 10 ஓட்டங்களுக்கும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 3 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன மறுபுறத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மெத்தியுஸ் 22 ஓட்டங்களுடனனும், தினேஷ் சந்திமல் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
211 ஓட்டங்கள் முன்னிலையில் மூன்றாம் நாளை ஆரம்பித்த இலங்கை அணியின், 7 வது விக்கெட்டிற்காக அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ் இருவரும் 173 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டது.
2வது இன்னிங்ஸின் போதும் சதம் பெற்ற தனஞ்சய 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் போதும் அவர் சதம் பெற்றிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் 02 சதங்களை அடித்த சந்தர்ப்பம் இதுவாகும்.
போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் போது கன்னி சதத்தை பதிவு செய்திருந்த கமிந்து மென்டிசும் 2வது இன்னிங்ஸின் போது சதம் பெற்றார். இறுதிவரை களத்திலிருந்த கமிந்து மென்டிஸ் 237 பந்துகளில் 164 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். இதன்படி இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக 418 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் மெஹிடி ஹசான் மிராஸ் 4 விக்கெட்டுகளையும் நஹித் ராணா மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
511 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறியது.
போட்டியின் நான்காவது நாளான இன்று(25) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் மொமினுல் ஹக் 87 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் கசுன் ராஜித 5 விக்கெட்டுகளையும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை அணி 328 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.