ஹாட்ரிக் சதங்களை தவறவிட்ட இலங்கை வீரர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக  531 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

314 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை ஆரம்பித்த இலங்கை அணி, முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில், எந்தவொரு வீரரும் சதம் பெறாமல் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். 

இலங்கை அணி சார்பில் இன்றைய தினம் கமிந்து மென்டிஸ் 92 ஓட்டங்களையும், அணி தலைவர் தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும் மற்றும் தினேஷ் சந்திமல் 59 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

இந்த இன்னிங்ஸில் 92 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட கமிந்து மென்டிஸ், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சதங்களை பெறும் வாய்ப்பினை 8 ஓட்டங்களினால் தவறவிட்டிருந்தார். கமிந்து மென்டிஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியிலும் இரு இன்னிங்ஸ்களின் போதும் சதம் கடந்திருந்தார். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பில் சகிர் ஹசன் 28 ஓட்டங்களடனும் தைஜுல் இஸ்லாம் ஓட்டங்கள் இன்றியும் களத்தில் உள்ளனர். 

பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் 476 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

போட்டியின் முதலாம் நாள் விபரம்,  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி சொட்டாகிராமில் நேற்று(30) ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரத்ன இருவரும் முதல் விக்கெட்டிற்காக 96 ஓட்டங்களை இணைப்பட்டமாக பெற்றுக் கொடுத்தனர். 

நிஷான் மதுஷ்க 57 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மென்டிஸ் 7 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டிருந்தார். குசால் 93 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியுஸ் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 314 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை(01) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply