பட் கம்மின்ஸின் தலைமைத்துவத்தில்  தலைநிமிரும் ஐதராபாத்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று(05) இந்த போட்டி நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் ஷிவம் துபே 45 ஓட்டங்களையும், ராஹனே 35 ஓட்டங்களையும் மற்றும் ஜடேஜா 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பட் கம்மின்ஸ், ஹபாஸ் அஹமட் மற்றும் உனட்பான்ட் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பறினர். 

166 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

ஹைதராபாத் அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 50 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ஓட்டங்களையும் மற்றும் டிராவிஸ் ஹெட்  31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் மொயின் அலி 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் தீக்‌ஷன தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், சென்னை அணி தொடர்ந்தும் மூன்றாம் இடத்திலேயே காணப்படுகின்றது. 

தரவரிசைப் பட்டியலில் , கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 3 வெற்றிகளுடன் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் இன்று(06) நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

ராஜஸ்தான் றோயல்ஸ்  அணியின் சொந்த மைதானமான ஜெய்பூரில் இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply