T20 உலக கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்ட இலங்கை..! 

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு  இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வீழ்த்தியதன் ஊடாக இலங்கை மகளிர் அணி  இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடருக்கு தகுதிப் பெற்றுக்கொண்டது. 

அபுதாபியில் நேற்று(05.05) நடைபெற்ற மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன 45 ஓட்டங்களையும், நிலக்‌ஷிகா சில்வா 10 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

150 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பில் அணித் தலைவி ஈஷா ஓசா 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவி சமரி அத்தபத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி 15 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் ஊடாக 2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகியாக ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பில் அணித் தலைவி ஈஷா ஓசா தெரிவு செய்யப்பட்டார். 

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டி நாளை(07.05) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை மகளிர் அணி, தகுதிகாண் சுற்றின் மற்றைய அரையிறுதி போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

மற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியும் 2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் 8வது போட்டியில் ஸ்கொட்லாந்து மகளிர் அணியை, இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தினால் வெற்றியீட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply