குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து – UPDATE

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

படகு சேவை குறித்து அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் என யாவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அதிகளவானோரை படகில் ஏற்றியமையே விபத்திற்கான காரணமென பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பிந்திய செய்தி

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் தற்சமயம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தின் அசமந்தப் போக்கின் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், டயர்களை எரித்து வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று (23/11) சபையில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், சபையில் சரமாரியாக கேள்விகளை தொடுத்திருந்தார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவும் அரசாங்கத்தின் இந்த அசமந்தப் போக்கு செயற்பாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது எனவும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கம் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

பிந்திய செய்தி

திருகோணமலை – கிண்ணியா,
குறிஞ்சாக்கேணியில் இன்று காலை (23/11) நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்சாக்கேணியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு ஒன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் அதில் பயணம் செய்த பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலரும் நீரில் மூழ்கியுள்ளதாக அறியமுடிகிறது.

எனினும், பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களால் காப்பற்றப்பட்ட ஒருசிலர் அம்பியூலன்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருவதுடன், இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மேலதிக சரியான விபரங்களுக்கு, ‘வி மீடியா’ செய்திகளுடன் இணைந்திருங்கள்.

குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து - UPDATE
குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து - UPDATE

Social Share

Leave a Reply