இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தேசமாக 2024 மே மாதம் 13ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் நியமிக்கப்பட்ட IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனம் இச்சேவையில் ஈடுபடவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையினை பயணிகள் இலகுவாக அணுகுவதனையும் இப்பயணத்தினை ஊக்குவிப்பதனையும் இலக்காகக் கொண்டு நாகபட்டினம் துறைமுகத்தின் நடைமுறைக் கட்டணம் மற்றும் ஏனைய பொருத்தமான கட்டணமாக மாதமொன்றுக்கு அறவிடப்படும் மொத்த கட்டணமான 25 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான தொகையினை ஒரு வருட காலப்பகுதிக்கு செலுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை இலங்கையிலிருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக பயணிப்பவர்களுக்காக அறவிடப்படும் வரியினை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னர் கடனுதவி அடிப்படையில் புனரமைப்பு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 63.65 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இலங்கையின் பொருளாதார மீட்சி, முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பயணத்துக்காக இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு, இந்தியாவுடனான மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துதலானது, இலங்கை ஜனாதிபதி அவர்கள் 2023 ஜூலையில் மேற்கொண்ட இந்திய விஜயத்தின்போது கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பங்குடைமைக்கான தொலைநோக்கு ஆவணத்தின் முக்கிய அங்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் இந்திய அரசாங்கம் மக்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கும் திட்டங்களை நோக்கிய உறுதிப்பாட்டை இவ்வாறான திட்டங்கள் குறித்து நிற்கின்றன. இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல, நாடுகளையும் அதன் மக்களையும் நெருக்கமாக்குவது என 2023 ஒக்டோபரில் இந்த சேவையை ஆரம்பித்த போது உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
எமது இரு நாடுகளுக்கிடையிலான பல் மாதிரி தொடர்புகள் வலுவடைந்துள்ள நிலையில், 2023 செப்டெம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலமும் இலங்கை மக்கள் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார வலையமைப்பு இணைப்பு, இரு வழி பல்நோக்கு குழாய் அமைப்பு மற்றும் நிலத் தொடர்பு பொருளாதார வழித்தடம் ஆகியவற்றை அமைத்தல் ஆகியவற்றின் ஊடாக இலங்கையுடனான இணைப்பானது எதிர்காலத்தில் மேலும் வலுவடையும்.