Playoffs நெருங்கிய சென்னை அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 

சென்னையில் இன்று(12.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் அணி சார்பில் ரியன் பாராக் 47 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் சிமர்ஜித் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 

142 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. சென்னை அணி சார்பில் அணித் தலைவர் ருத்துராஜ் கெய்க்வாட் 42 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திர 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

இதன்படி, இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் சிமர்ஜித் சிங் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய சென்னை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளது.

Social Share

Leave a Reply