2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய(17.05) போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
இந்த இரு அணிகளும் Playoffs சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பை முன்னதாகவே இழந்திருந்த நிலையில், இந்த போட்டி இரு அணிகளுக்கும் 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியாக அமைந்திருந்தது.
மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. லக்னோ அணி சார்பில் நிகோலஸ் பூரன் 75 ஓட்டங்களையும், அணித் தலைவர் கே.எல். ராகுல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் நுவான் துஷார, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
215 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. மும்பை அணி சார்பில் ரோஹித் சர்மா 68 ஓட்டங்களையும், நமன் தீர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னோ அணி சார்பில் பந்து வீச்சில் நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் நிகோலஸ் பூரன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய லக்ளோ அணி இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரை 14 புள்ளிகளுடன் தரவரிசையில் 6ம் இடத்தில் நிறைவு செய்ததுடன், 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மாத்திரம் வெற்றியீட்டிய மும்பை அணி தரவரிசையில் இறுதி இடத்தில் உள்ளது.