டி20 உலகக்கிண்ணம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது நேபாளம் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 7வது போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றியீட்டியது. அமெரிக்காவின் டலாஸ் மைதானத்தில் நேற்று(04.06) நடைபெற்ற இந்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக சில நிமிடங்கள் தாமதமாகியே போட்டி ஆரம்பமாகியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. நேபாளம் அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் பவுடல் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். நெதர்லாந்து சார்பில் பந்து வீச்சில் டிம் பிரிங்கிள், வான் பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

107 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. நெதர்லாந்து அணி சார்பில் மெக்ஸ் ஒடோவ்ட் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

இதன்படி, இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக நெதர்லாந்து அணியின் டிம் பிரிங்கிள் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய(05.06) போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.   

Social Share

Leave a Reply