‘தேசியத் தலைவர் பிரபாகரன்’ என பாராளுமன்றத்தில் பேசியதனால் சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இன்று சபையில் உரையாற்றும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, ‘தேசியத் தலைவர்’ என்று விளித்து கூறியிருந்தார். இதன் காரணமாக இன்று சபை சூடுபிடித்தது.

நேற்றைய தினம் (23/11) அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டார் என கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவ்வாறு ஒருபோதும் ஈடுபடவில்லை என்பதை கூறும் பொழுது, “எங்கள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்ற சொற்பதத்தை சபையில் கூறினார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபோல, “பயங்கரவாத தலைவர் ஒருவரின் பெயரை இலங்கை பாராளுமன்றத்தில் ‘தேசிய தலைவர்’ என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் இதனை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அத்துடன் அவருக்கு சார்பாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், சபைக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரிடம் குறித்த சொற்பதத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

எனினும், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும் என்றும் கருத்து சொல்லும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு உண்டு என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் இது தொடர்பில் சபாநாயகருக்கு தான் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

‘தேசியத் தலைவர் பிரபாகரன்' என  பாராளுமன்றத்தில் பேசியதனால் சர்ச்சை

Social Share

Leave a Reply