இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று(20.06) இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், தமிழக முதல்வரினால் மீனவர்கள் தொடர்பில் இவ்வாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைகள் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மீனவர்களுக்கு அச்ச உணர்வும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுவதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 15 மீனவர்களும் 162 மீன்பிடிப் படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரினால் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.