ஷம்மி சில்வாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணியின் தீர்மானங்கள் 

தற்போது இடம்பெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணியின் தீர்மானங்கள் ஆச்சரியமளிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியிருந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஷம்மி சில்வா விளக்கமளித்துள்ளார்.

இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத போதும், சிறந்த அணிகளுடன் ஒப்பிடும் போது உரிய வசதிகளை அணிக்கு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தான் போட்டியில் பங்குபற்றியதைப் போன்று கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணியின் சில தீர்மானங்கள் ஆச்சரியமளித்ததாகவும், இத்தகைய தீர்மானங்கள் இலங்கை வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்டதாக ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். 

ஆடுகளங்களின் நிலைமைகள் மற்றும் சில சிறந்த அணிகள் தொடரிலிருந்து வெளியேறியமை குறித்து பலர் புரிந்து கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதேவேளை, கடந்த சில வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதில் நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நிலைமை வலுவாக இருக்கவில்லை எனவும், ஆனால் தற்போது கிரிக்கெட்டில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளில் இலங்கை 4ம் அல்லது 5ம் இடத்திலிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இந்த வருமானத்தை பயன்படுத்தி இலங்யைில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உறுதியளித்துள்ளார்.  

Social Share

Leave a Reply