அரையிறுதியில் இந்தியா, வெளியேற்றத்தின் விளிம்பில் அவுஸ்ரேலியா

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுக்கொண்டது. சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலியா அணி எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொண்டது. மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் இன்று(24.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், ஹாட்ரிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

206 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. அவுஸ்ரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 76 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். சூப்பர் 8 சுற்றில் முதலாவது குழாமில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 

இந்நிலையில், அரையிறுதி சுற்றுக்கு அவுஸ்ரேலியா அணி நுழைவது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. 3 போட்டியில் பங்கேற்ற அவுஸ்ரேலியா ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலுள்ளது. 

இதன் காரணமாக, நாளை(25.06) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொள்ளும். பங்களாதேஷ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அவுஸ்ரேலியா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

Social Share

Leave a Reply