‘ஐ.நா இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுகிறது’

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுடன் நேற்று (25/11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி சுற்றாடல் தொடர்பாக காட்டும் ஆர்வம் மற்றும் நோக்கு பற்றி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த உதவிப் பொதுச் செயலாளர், அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கையின் ஆர்வத்தையும் பாராட்டினார்.

அதனை தொடர்ந்து, கொவிட்-19 தொற்றுக் காலத்தில், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்வதற்கும் ஏனைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ‘கோவெக்ஸ் வசதிகள்’ ஊடாக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் அப்பிரதேசங்கள் துரித வளர்ச்சி கண்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் உறவுகள் தொடர்பாக இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்ட போது, அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று இலங்கையில் காணப்படுகின்றது எனவும், நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார், நீதியரசர் ஒரு தமிழராக இருக்கிறார். மேலும் பல்வேறு விசேட பதவிகளை வகிப்போர் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

'ஐ.நா இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுகிறது'

Social Share

Leave a Reply