சுட வேண்டிய இடத்தில் சுட வேண்டும் என்றும், துப்பாக்கி என்பது விளையாட கொடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று(04.07) முதல் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒடுக்குமுறையின் புதிய திட்டம் குறித்து பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிகளை சரியான விடயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் சிக்கலில் இருந்து குழந்தைகளையும் குடும்பங்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் இந்த செயல்பாடுகள் தொடரும் என்று கூறியபோது பலர் தன்னை விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அமைச்சுப் பதவியில் இருக்கும் வரை போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவேன் எனவும் கடந்த டிசெம்பர் மாதம் தனது பாதுகாப்பைப் பற்றி கூட சிந்திக்காமல் நீதிக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மறைந்திருந்து இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், ஏனைய பாதாள உலகக் குழுக்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.