வடக்கு,கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு – எதிர்க்கட்சித் தலைவர்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக்குறைவான மட்டத்திலேயே காணப்படுவதாக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ்,
281 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,
மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த சஜித் பிரேமதாச

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42% பங்களிப்பை வழங்கி வருகிறது.
மீதமுள்ள 58% பங்களிப்பை ஏனைய 08 மாகாணங்களும் வழங்கி வருகின்றன.
கிழக்கு மாகாணம் 5% க்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது.

உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும்,
எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்வரையில் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அன்று தொடக்கம்
இன்றுவரையுள்ள எந்தத் தலைவராலும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட முடியவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் மையப்படுத்தி
நாடு தழுவி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம்.

இந்த 2 மாகாணங்களிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்,
போரினால் இடம்பெயர்ந்த கணவனற்ற குடும்பங்கள் மற்றும் போர்வீரர்கள் என சமூகத்தில்
பல மட்டத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனைவரும்
ஒன்றிணைந்து இலங்கையர்களாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. மத அடிப்படையில் இனங்கள் ஒன்றிணைய வேண்டும்.
இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் மூலம் இன, மத, சாதி, வர்க்க, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இவை அனைத்தும் வாய்மொழியாகச் சொல்லப்படுவது போலவே செயல்படுத்துவேன்.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் புதல்வர் என்ற வகையில் வடக்கு,
கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்தி,
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கிராமங்களிலும் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவேன்.

ஜனாதிபதி என்ற வகையில் e governance ஊடாக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து
வினைதிறனான நிர்வாகத்தை முன்னெடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்,
பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் புதல்வர் அம்ஜாட் மௌலான மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் திருமதி
உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply